Divine compositions on Sri Hanuman

Popular short verses on Sri Hanuman composed by Sri Kamakshi Dasa.

ஹனுமத் பஞ்சகம்

அஞ்சனா தேவி பெற்ற ஆஞ்சனேயனே போற்றி
பஞ்சமா முகங்கொண்ட பார்புகழ் மாருதி போற்றி
தஞ்சமாய் வருவோர் தாபம் தணித்தருள் தேவே போற்றி
வஞ்சமே யில்லா ருள்ளம் வசித்திடும் ஹனுமான் போற்றி (1)

வாயுவின் புத்திரனான வலிமை கொள் மாருதி போற்றி
நோயினை நொடியில் நீக்கும் நோன்புடைய ஹனுமான் போற்றி
பேயினை ஓட வைக்கும் வீர வாஞ்சயனேயனே போற்றி
தாயினைப் போலக் காக்கும் தயை மிகு தேவா போற்றி (2)

இராமனை இதயத்துள்ளே என்றுமே வைத்தான் போற்றி
இராமனின் நாமமொன்றே என்றுமே இசைப்பான் போற்றி
இராமனை ஒதும் எல்லா இடத்துமே இருப்பான் போற்றி
இராமனை வணங்குவோர்க்கு இரங்கு மாஞ்சனேயனே போற்றி (3)

இராம ராமா ராமா என்றுமே என்றும் ஓதும்
இராமனின் தூதனாகிய இலங்கை மாநகரில் ஏகி
இராமனின் பத்தினி சீதை ஏக்கமும் நீக்கி வைத்த
இராமனின் சேவை பூண்ட ஈடிலா மாருதி போற்றி (4)

சஞ்சீவி கொண்டு வந்த சிரஞ்சீவி ஹனுமான் போற்றி
செஞ்சரன் போற்றுவார் நோயைத் தீர்க்குமாருதியே போற்றி
அஞ்சலென் றபய மீயும் ஆஞ்சனேயனே போற்றி
பஞ்சமா பாதகம் தீர்க்கும் பரமனே போற்றி போற்றி (5)

ஹனுமார் அநுபூதி

அருள்வா யெனவே ஹனுமா னுனையே
குருவாய் நிதமே குறுகிப் பணிவேன்
தருவாய் கதியுந் தனமும் புகழும்
வருவாய் அருள்வாய் வளம்யா வையுமே (1)

கருவே யணுகாக் கதியே பெறவே
குருவாய் வருவாய் குறைதீர்த்திடவே
தருவாய் மணியாய் ஜயமாருதியே
வருவாய் அருள்வாய் வரமே பெறவே (2)

அரிதா கியவோர் ரகுரா மனையே
பிரியா துளமீ திடுமா ருதியே
பரிவா யுனையே பணிவேன் நிதமே
புரிவாய் புரிவாய் அருளே புரியே (3)

பெருவாழ் வுடனே பிணியே துமிலா
தொருவாழ் வுறவே உடனே வருவாய்
அருள்வாய் அறிவுந் தனமும் புகழும்
தருவே மணியே ஜயமா ருதியே (4)

ஜயவீ ரனெனத் தலமீ தொளிரும்
ஜயமே புரியும் ஜயமா ருதியே
செயல்யா வையுமே ஜயமா கிடவே
தயவே புரிவாய் தருவாய் ஜயமே (5)

மாருதி வாழ்த்துப் பஞ்சகம்

அஞ்சனா தேவி பெற்ற அரும் பெரும் புதல்வன் வாழ்க
பஞ்சமா முகமுங் கொண்ட பார் புகழ் மாருதி வாழ்க
தஞ்சமாய்ப் போற்று வார்க்குத் தனந்தரு ஹனுமான் வாழ்க
சஞ்சீவி கொண்டு வந்து சிரஞ்சீவியானோன் வாழ்க (1)

வாயுவின் புத்திரனை வலிமை கொள் மாருதி வாழ்க
நோயினை நொடியில் தீர்க்கும் நோன்புடை ஹனுமான் வாழ்க
பேயினை ஒட வைக்கும் வீர வாஞ்சனேயன் வாழ்க
தாயினை போலக் காக்கும் தயை மிகு தேவன் வாழ்க (2)

இராமனை இதயத்துள்ளே என்றுமே வைத்தோன் வாழ்க
இராமனின் நாமம் என்றும் இசைக்கும் மாருதியே வாழ்க
இராமனை ஓதும் எல்லா இடத்துமே இருப்போன் வாழ்க
இராமனை வணங்குவோர்க்கு எளியனாம் ஹனுமான் வாழ்க (3)

செயல் எல்லாம் ஜயமாய் ஆக்கும் சீராம தூதன் வாழ்க
இயமனைக் காய்ந்து காக்கும் ஈடிலா மாருதி வாழ்க
தயமற வாழவைக்கும் பக்த ஹனுமானே வாழ்க
நயமிகு ஞான மீயும் ஞான பண்டிதனே வாழ்க (4)

வாழ்கவே ஆஞ்சனேயன் வாழ்கவே ராம தூதன்
வாழ்கவே வையகம் போற்றும் வாயுவின் புத்திரன் வாழ்க
வாழ்கவே ராம நாம மகிமையை உணர்ந்தோன் வாழ்க
வாழ்கவே மங்கள மீயும் மாருதி வாழ்க வாழ்க (5)